Monday, February 5

ஆன்மீகமும் காதலும்


            இப்போது தமிழ்நாட்டில் படாதபாடு படும் வார்த்தைகளில் முதன்மையானது ஆன்மீகம் என்ற வார்த்தைதான். ஆன்மீகம் என்றால் என்ன? அது ஓர் உன்னத உணர்வு. காதலைப் போல. உன்னதமான ஆன்மீக நிலையை அடைந்தவர்களுக்கு எவ்வித மார்க்கமும்  தேவைப்படாது. ஆனால் அதனை முழுமையாக உணர்ந்தவர்கள் மிகச்சிலரே. ஆன்மீக நிலையை அடைந்தவர்களின் அடையாளமாக வெளித் தெரிவது, அவர்களின் உள்ளும் புறமும் அற்ற உண்மை அன்பே. அதாவது உண்மையில் எவனொருவன் பிறரை நேசித்து, அவர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கிறானோ அவனே மிகச் சிறந்த ஆன்மீகவாதி. அத்தகைய ஆன்மீக உணர்வை அடைவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட வழிகளில் ஒன்றுதான் பக்தி மார்க்கம். ஆன்மீகம்(Spiritual) என்பதும் தெய்வீகம்(Devotional) என்பதும் வேறு வேறு என்பது வாதிடுபவர்களுக்குப் புரிந்தே இருக்கின்றது.
இன்று  கடவுளை மறுப்பவர்கள், ஆன்மீகம் என்ற ஒன்று  இல்லை என்பது எப்படி இருக்கிறது தெரியுமா? அன்பே சிவம் படத்தில் கமல் ஒரு வசனம் சொல்வார். “தாஜ்மஹால் இல்லைன்னா காதலே இல்லைன்னு சொல்வீங்களா?” அதுபோல நீங்க கடவுள் அல்லது இறைமை என்பதை உணரவில்லை என்பதற்காக ஆன்மீகம் என்ற உணர்வே இல்லை என்று வாதிடுவது முறையல்ல. இந்து மதம் என்ற மதமே இல்லை என்பதுதான் பலரின் வாதம். இருக்கட்டும். ஆனால் பல்வேறு விதமான புராண கதைகளை மக்கள் செவிவழிக் கதைகளாக, ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்பி வருகிறார்கள். எவை காலங்கடந்து நிற்கிறதோ, அவற்றைக் காலம் மக்களுக்காகப் போற்றி வருகிறது என்பதே மெய். இந்து மதம் இல்லை என்ற வாதத்தினை வைப்பவர்கள் கூட சைவம், வைணவம் என்ற இரண்டு த‍த்துவங்களை மறுக்க இயலாது.
கடவுளை நம்புவோர் பக்தி மார்க்கத்தின் மூலமும், நம்பாதோர் வேறு ஏதோ மார்க்கத்தின் மூலமும் ஆன்மீகத் தேடலில் இறங்கலாம். இதற்கு மதங்கள் ஒரு பாதை, அவ்வளவே. இன,மத அடையாளங்களை விடுத்து, தினமும் திருக்குறள் கற்று வந்தாலே ஆன்மீகத்தை அடையலாம். திருக்குறளும் ஓர் ஆன்மீக நூலே. சரி, ஆன்மீகத்தால் உலகைக் காப்பாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்புவர்களுக்கு; காப்பாற்ற முடியுமா என்பதை விட கண்டிப்பாக ஆன்மீகவாதிகளால் உலகிற்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதே உண்மை. இன்னும்.. தெய்வீகத்தின் முதல் படியில் மனதார கால் வைத்தவர்களால் கூட மனதாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவர்களைக் காயப்படுத்த முடியாது.. பின்னர் எப்படி உண்மை ஆன்மீகவாதிகள் காயப்படுத்துவார்கள்?
. அப்படி காயப்படுத்துபவர்கள் நிச்சயம் ஆன்மீகவாதிகளும் அல்லர்; ஏன்? தெய்வீகத்தன்மை கொண்டவர்கள் கூட அல்லர்; மதவாதிகள் என்று அழைப்பது கூட தவறு. மதம், தெய்வீகம் என்பதன் உண்மை பொருள் அறியாத பேதைகள் அல்லது எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே மக்களை பதைபதைக்க வைக்கும் மக்கள் விரோதிகள் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.  அன்றாடம் வாழ்வினைக் கடத்த ஆயிரம் முயற்சிகள் எடுத்து இன்ப, துன்பங்களுக்கு இடையில் உழன்று வரும் மிகச் சாதாரண எங்களுக்கு(எந்த மத‍த்தினராய் இருந்தாலும்) மனதிற்கு ஆறுதல் தருவது தெய்வீக வழிபாடுகளே.. அதில் ஏன் உள் நுழைகிறீர்கள்?  மத‍த்தின் பேரால் ஏன் எமக்குள் பிரிவினை உருவாக்குகிறீர்கள்? மதவாதிகள் மட்டுமல்ல, இனவாதிகளே உங்களையும் தான். மக்களுக்கு வேண்டியதை செய்துதர மறந்து இயங்கும் அரசைக் கேள்வி கேளுங்கள், மக்களை அல்ல. அதிகாரமும் பதவியும் இருந்தால் தான் நாங்கள் மக்களுக்கு உதவுவோம் என்பவர்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் வந்து எமக்குள் சண்டை மூட்டுங்கள். அதுவரை எங்களை நாங்களாக வாழவிடுங்கள்.
இப்படி மக்களை ஏமாற்றித் திரியும் அத்துணை பேரையும் சிறையில் அடைத்து தினமும் திருக்குறள் வகுப்பு எடுக்க வேண்டும். திருக்குறள் தந்த மொழியினைக் கொண்டே, திருக்குறளையும் கையில் வைத்துக் கொண்டு வாயில் வருவதை எல்லாம் பேசித் திரிபவர்களைக் காணும் போது................ என்னைத் திருக்குறளும், தமிழும் தடுக்கிறது.

No comments:

Post a Comment