Thursday, March 29

பரீட்சை முடிந்தவுடன்......(?)

பெற்றோர் தொல்லையில் இருந்து
பெறுவதாய் இருந்த சுதந்திரம் இன்னும் 
பலநாள் கழித்தே வரும் என்ற
கவலைதான் முதலிடத்தில்.
 
தொலைக்காட்சி, கைப்பேசி எல்லாம்
கனவில் வந்து கைக்காட்டி செல்கின்றன,
 
தோழியருடன் ஊர் சுற்ற போட்ட
திட்டங்கள் எல்லாம் கிடப்பில்.
 
பாட்டி தாத்தாவைப் பார்க்க எடுத்த பயணச்சீட்டு
பல்லை இளிக்கின்றது என்னைக் கண்டு!!
 
இரண்டு தினம் முன் இந்தப் பரீட்சைக்காய்
இரவு முழுதும் கண்விழித்த
என்னை நேர்கொண்டு காண இயலா..
குற்ற உணர்வுடன்
அம்மாவும் அப்பாவும் ..
 
"விடம்மா.. கணிதம்தானே,
மீண்டும் எழுதலாம்"
ஆறுதல் நான் சொல்ல
ம்மா
அமைதியாய் நகர்ந்து செல்லும் தருணம்
இனி எப்போது கிடைக்கும்?
 
பத்தாம் வகுப்பு முடிந்தவுடன்
உலகமே நம் காலடியில்
விழுந்தது எண்ணத்தில் அடி.
 
என்ன புலம்பி என்ன புண்ணியம்?
எடு மீண்டும் கணிதப் புத்தகத்தை.
 
"இடுக்கண் வருங்கால் நகுக".
குறள் சொல்லிப் புன்னகைக்கிறார் வள்ளுவர் தாத்தா.
ஆம் தாத்தா..
சத்தமாக நகைக்கிறோம்..
மௌனமாகவே புலம்புகிறோம்.
நல்லவேளை
ஐந்தில் இல்லாமல் ஒன்றில் மட்டுமே
மீண்டும் சோதனை.
 
 

No comments:

Post a Comment