‘பிரபஞ்சத்திடம்
கேள்; கிடைக்கும்’ என்னும் தத்துவமே
மிக தாமதமாகத்தான் எனக்கு தெரிந்து புரிபட்டது. கேட்டால் கிடைக்கும் என்பது
மெய்தானா? சில கிடைத்தது. இருந்தும் சில சந்தேகங்கள்.
நமக்கு வேண்டியவற்றைத்தான் நாம் கேட்கிறோமா? இல்லை
நமக்குத் தேவையானவற்றைக் கேட்கிறோமா? எந்தக் குழந்தையும்
நல்ல உணவைக் கேட்பதை விட உடலுக்குத் தீது விளைவிக்கும் பிடித்த உணவைத்தானே
கேட்கும். இப்படி நாமும் இந்தப் பிரபஞ்சத்தின் முன்பு குழந்தைகள்தானே... வேண்டியது
கேளாமல் , பிடித்ததைக் கேட்கும் குழந்தைகள்தானே. பிரபஞ்சம்
என்பதை உணரமுடியா குழந்தைகள்.
மாற்றி யோசித்தேன். நமக்காக
நாம் யோசித்து, பிரபஞ்சத்திடம் கேட்டு, சில சமயம் நடந்து, பல சமயம் நடவாமல், அதற்கு ஊழினையும் விதியையும்
காரணஞ் சொல்லி... ஏதோ ஒரு குழப்பம் என்னுள்.. அதற்குப் பதிலாக நமக்காக இந்தப்
பிரபஞ்சம் ஏதோ ஒன்றை நமக்காக ஏற்கனவே திட்டமிட்டு வைத்துவிட்டது. எப்போதும் போல நமது
ஊன அறிவு அதனை நம்ப மறுக்கிறது. ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அதன்படி நடக்கவும்
மறுக்கிறது.
இங்கு பிரச்னை என்னவென்றால், அப்படி ஒரு
பாதை இருப்பதை உணர ஞானம் வேண்டும். அந்த ஞானம் எல்லாருக்கும் இயல்பிலேயே
வருவதில்லை. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பதினாறு பதினேழு வயதுகளில் ஒரு
புள்ளியோ கோடோ நமக்கு எப்படியோ உணர்த்தப்படுகிறது. அதைச் சரியாக புரிந்து
கொண்டவர்கள் வாழ்க்கையின் பாதையைப் பற்றி அவர்கள் பயணத்தைத் தொடருகிறார்கள். இடை
இடையே வரும் தடைகள் கூட இறைமையால் அனுப்பப்படும் யாரோ ஒருவர் மூலம் அதுவாக
நீங்கும். நிரம்ப அலட்டிக் கொள்ள வேண்டாம். அந்தப் பிறவியை அன்பாக, அழகாக, ஆத்ம சாந்தியுடன் கடக்கின்றனர்.
ஒருவேளை நமக்கான பாதை உணர்த்தப்பட்ட பின்பும், குழந்தைகள்
போல முரண்டு பிடித்து, நமக்கு பிடித்த வேறு ஒரு பாதையை நாமே
தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும்? பாதை விலகிய நம்மை,, மிகவும் கடினப்பட்டு போராடி, மீண்டும் நமக்காய்
உணர்த்தப்பட்ட பாதையில் நம்மைக் கொண்டும் சேர்க்கும் பெரும் பொறுப்பை பிரபஞ்சம்
எடுத்துக் கொள்கிறது. இப்போது, நாமாய் தேர்ந்தெடுத்த பாதையில்,
இடையூறுகள் அதிகம் வந்த வண்ணம் இருக்கும். நாம்தான்
நமக்கான, இறைவன் அனுப்பும் தூதரைக் கண்டறிய வேண்டும். அவர்
நம்மைத் தேடி வர மாட்டார். தேடல் மிகுந்து மிகுந்து, இடையூறுகள்
தாண்டி ஒரு வழியாக நம் பாதையை நாம் அடைவதற்குள், அனுபவங்கள்
நிறைந்து வயதாகி விடுகிறோம். ஆனால் நமது சரியான பாதையை அடையும் போது பதின்களில்
வழிமாறிய இடத்திலேயே காலமும் பிரபஞ்சமும் நம்மைச் சேர்க்கிறது. கிட்டத்தட்ட மீண்டு, வாழும் ஓர் அனுபவம். இங்கிருந்து சரியாக வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த அனுபவம்
கூட அனைவருக்கும் வாய்ப்பதில்லை. கடைசி வரை தனக்கான பாதையைக் கண்டுபிடிக்காமலே வாழ்ந்து
மடிந்தவர்களும் உண்டு. இப்போதைய என்னுடைய புரிதல் வாழ்வைப் பற்றி.
No comments:
Post a Comment