Monday, September 3

அறம்


நம்மிடம் கையேந்துபவர்களிடம்

கொடுக்க ஒன்றுமில்லா நிலையிலும்

கனிவுடனும் இனிமையுடனும் புன்னகையுடனும்

கனிந்த பார்வையை ஈதல் ஓர் அறச் செயல்.

 

இல்லாளை நோகாது

இயல்பாய் அன்பு செய்தலும் ஓர் அறச்செயல்.

கல்வி கேள்வி பொருள் என பெற்ற செல்வங்கள் இருந்தும்

கால் நிலத்தில் இருத்தல் ஓர் அறச்செயல்.

 

தேர்வெழுதும் சமயத்தில் தெரியாத கேள்விகளை

தெரிந்தவரைக் கேட்டு எழுதாது வருவதும்

ஒர் அறச்செயல்.

 

பொய் சொல்லும் இடத்தும்

 பொய் சொல்லாதிருத்தல் ஓர் அறச்செயல்.

இங்கொன்றும் அங்கொன்றும் பேசி

இல்லாததை உண்டு என்றும்

இருப்பதை இல்லை என்றும் பேசாதிருத்தல் ஓர் அறச்செயல்.

 

எதிராளியை அடக்கும் கணத்திலும்

இன்று போய் நாளை வா என்பது ஓர் அறச்செயல்.

பாற்கடல் கடைய பொங்கிய நீலத்தை

கண்டத்திலே அடக்கியதும் ஓர் அறச்செயல்.

 

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக் கணைகள்

நம்மை அவமதிப்பதற்காகவோ - இல்லை

உண்மையில் உண்மையைத் தெரிந்து கொள்ளவோ?

ஐயமின்றி பயமின்றி பதிலளித்தலும் ஓர் அறச்செயல்.

அடுத்தவர்க்கு தொல்லை எனும் போது

ஆரவாரம் செய்யாது அடங்குதலும்

ஓர் அறச் செயலே.

 

இன்னும் எத்தனையோ..

இந்த அறச்செயல்களை செய்ய நமக்கு

கால நேரம் வேண்டுமா?

எப்போதும் மாசற்ற மனமிருக்க

மனதில் அறம் இருக்க

செய்யும் செயல் யாவும் அறச்செயலே!
 

No comments:

Post a Comment