Thursday, December 24

வள்ளுவருக்கு எழுதுகிறேன்...


 ஆசானே....

உயர்ந்த இலக்குகளைக்

குறிவைக்கச் சொன்னீர்.


கலியுகம் அல்லவா?

இலக்கிற்கு 

குறி வைக்காது...

இலக்கு கொண்டவர்களைக்

குறி வைக்கிறோம்.


கவிழ்த்து விடத் துடிக்கிறோம்.

மாட்டிவிட அலைகிறோம்.


உள்ளத்தில் 

உயர்வு கொள்ள

உன்னையும் படிக்கிறோம்.


தனித்திருக்கும் போது 

மனம் நிறைய மாசும்

சொல் நிறைய சினமும்

செயல் நிறைய சீர்கேடும்.


கூடியிருக்கும் போதோ

அத்தனையும் அடக்கும் 

வல்லமை பெற்றவராய்...


இனியாவது இலக்குகளைக்

குறி வைக்க

உள்ளுவோம்.

உயர்வு கொள்வோம்.


Thursday, December 17

உறவும் நட்பும்...


 என்கையமர்ந்த பட்டாம்பூச்சிகள்

என்னைவிட்டுச் செல்லுவதில்லை.

நினைவுகளாயினும் நட்புகளாயினும்

நான்கைவிடவே பறந்திருக்கின்றன.


தொலைத்ததாய் ஏதுமில்லை

தொலைவாய் இருக்கின்றன

தொல்லைகள் இல்லாதிருக்க

தொலைவுகள் தேவையென்கிறேன்.

Monday, December 14

மாறுவோம் இனி...




பாட்டியா அவள்?
மருந்துகள் பல
தன்னில் கொண்ட
பொட்டி அவள்.

சுக்கு மிளகு திப்பிலி என
முக்கடுகம் கொண்டவள்.
தினை வரகு சாமை என
மூவகை அரிசி கண்டவள்

சீரகமும் மல்லியும் தட்டி
அரைத்து மிளகு இடித்து
வைத்த இரசம் வீடெங்கும்
கொதித்து மணம் வீசும்.

அடித்த கோழிக்கும்
வெட்டிய ஆட்டுக்கும் அவள்
பூசிய மஞ்சள் நாம்
பூசியதில்லை.

நாம் செய்ததெல்லாம்
நம்முடன் சேர்த்து
அவளையும் பாஸ்தா
உண்ணச் செய்ததுதான்.

மருந்து மருந்து என
விருந்துதானே உண்கிறோம்.
இருந்தும் பன்னீரும் நானும்
பருகரும் பீசாவும் தேவையாய் போனது.

விருந்து போல மருந்துண்ணாது
மருந்து போல உணவுண்டு
மகிழ்வாய் வாழும் வாழ்விற்கு
மாறுவோம் மெல்ல மாறுவோம்

Tuesday, December 8

தோழியர்களுக்கு...




கவர்ந்தது எப்போதும் கமல்தான் என்பாய்
கவர்ந்தது எப்போதும் கலைஞர் என்பேன்
கிரிக்கெட் பார்த்து கட்டுரை வரைவாய்
பிரித்து மேய்வேன் நான்.

மனத்தில் பதிய மனனம் செய்ய
மணலில் நடந்து மறைவிடம்  தேடி
மறைந்து அமர்ந்து மாங்காய் பறித்து
நிறைந்து விடுமே நாள்.

படிக்கும் நேரம் பறவை யானோம்
நடிக்கும் நேரம் நடிகர் ஆனோம்
ஆடும் நேரம் ஆனந்தம் கொண்டோம்
பாடும் நேரமோ குயில்.

தங்கிய விடுதியில் தாயை எண்ணி
பொங்கிய கண்ணீர் பொசுக்கென மறைய
என்றும் என்னுடன் எங்கும் இருப்பாய்
இன்றும் இருக்கிறாய் எங்கோ.

இடைவெளி வந்தும் இடைஞ்சல் வந்தும்
இடங்கள் பிரிந்து இடையூறு வந்தும்
இணையம் சேர்க்கும் இடைவெளி பூசும்
இணைந்து கொள்வோம் நாம்