Thursday, February 24

அப்பாவின் சைக்கிள் 

பெற்ற ஐந்தில் 

 பெண்ணிரண்டும் கடைசியாய். 

பெருமையும் பெருமிதமும்

 பொங்கியது மனதில். 


 புகழ்பெற்ற பள்ளியில் 

என்னைச் சேர்த்தாச்சு. 

பேருந்தும் சரியல்ல. 

ஆட்டோவும் அப்போதில்லை.


 பள்ளியோ பதினெண் கிமீ தள்ளி

மிதிவண்டிதான் ஒரேவழி. 

காலை மாலை இருநேரமும்

தனியொரு ஆளாய் மிதித்தபடி.


 மூன்று வருடங்கழித்து 

என் தங்கையும் 

 அதே பள்ளியில். 

மூவரையும் சுமந்தபடி ஒருவருடம்.


 இப்போது நினைத்தாலும் 

மலைத்துப் போகிறேன். 

எப்படியென்று.


 லொடலொடவென்று சத்தமிட்டாலும் 

பிள்ளைகள் வளர்ந்து

 ஆளுக்கொரு வண்டி 

 வாங்கிய பின்னும். 


 இன்னும் மிதிவண்டி

 மிதித்தபடிதான் 

அப்பாவின் வாழ்க்கை. 


எனக்கும் மிதிவண்டியெனில்

அப்பாவின் வண்டி மட்டுமே 

நினைவிலுண்டு. 

No comments:

Post a Comment