கடந்த எல்லா வருடங்களிலும் வாலன்டைன்ஸ் டே - க்கு என் கணவரிடம் ஏதாவது பரிசு கேட்டால் , ‘இதெல்லாம் Business tactics, பணத்தை வேஸ்ட் செய்யக் கூடாது’ என்று ஒரு பாடமே நடக்கும். நான் மட்டும் ஏதாவது எனக்குத் தெரிந்த வகையில் ஒரு அழகான (?) கார்டு செய்து கொடுப்பேன்.
இந்த வருடம் தான் கவிஞி ஆகியாச்சே, ஏதாவது புதிதாக எழுதித் தரலாம் என்றால், உடல்நிலை சரியில்லை. ஒன்றரை நாட்களுக்கு படுத்த படுக்கையாகி விட்டேன்.
வாலன்டைன்ஸ் டே யும் வந்தது. பார்த்தால், ஒரு பெரிய கார்டுடன் காலை வணக்கம். அதனுடன் குட்டியாய்(அதில் கொஞ்சம் வருத்தம்தான்!) ஒரு பரிசும்.! அடடா! எதிர்பார்க்காமல் வந்த இன்ப அதிர்ச்சியில் காய்ச்சல் இன்னும் அதிகமாகி விட்டது.
இந்த பதிவு ஏன் போடணும் என்று தோணியது என்றால் , வாலன்டைன்ஸ் டே என்றாலே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் மட்டும் தான் கொண்டாட முடியும் என்கிற மாதிரி ஆக்கி விட்டார்கள். எந்த டி.வி. சானல்களைத் திருப்பினாலும், எந்த புத்தகங்களைப் பார்த்தாலும் காதல் திருமணம் செய்து கொண்டோர்களை மட்டுமே பேட்டி எடுத்து போட வேண்டியது. பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வாலன்டைன்ஸ் டே கிடையாதா? இல்லை அதற்குதான் உரிமை இல்லையா?
(திருவிளையாடல் படம் பார்த்த effect!) இது ஏதோ பொறாமை ப் பட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்? (நற,நற...)
பொதிகையில் 3 தம்பதியினரை பேட்டி எடுத்து போட்டார்கள். (காதலித்து திருமணம் செய்தவர்கள் தான்). அதில் ஒரு பெண்மணி ‘எங்களைப் போன்று காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு(இனி கா.தி.செ.கொ) சலுகைகள் வழங்கப்பட வேண்டும்’ என்று சொன்னார். எனக்கு ஒரே அதிர்ச்சியாகி விட்டது. இட ஒதுக்கீடு வேறு கேட்டார்! என்னுடைய சந்தேகம் என்னவென்றால், கா.தி.செ.கொ என்று ஒரு தனி ஜாதி கேட்டு விடுவார்களோ? அவர்களுக்கு முன்னுரிமை etc. எல்லாம் கேட்பார்களோ?
இப்போதே , கா.தி.செ.கொ - களுக்கு என்று அரசு சில சலுகைகளை அளித்து வருகிறது என்று நினைக்கிறேன். இனி தான் ஒரு முக்கிய சந்தேகம்,
கலப்பு மணம் செய்து கொண்ட தம்பதியர் எத்தனை பேர் மதம், ஜாதி நிஜமாகவே எங்களுக்குத் தேவையில்லை என நினைக்கிறார்கள்? இரு பக்க வீடுகளையும் சமாளிப்பதற்காக மட்டுமல்லாது உண்மையிலேயே அவர்கள் ஜாதி ,மதம் தேவையில்லை என நினைக்கிறார்களா? பின் ஏன் குழந்தைகளுக்கு மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த பழக்க வழக்கங்களைத் திணிக்கிறார்கள்?
கா.தி.செ.கொ ண்டவர்கள். செய்து கொள்ளப் போகிறவர்கள் எல்லோரும் - என்னை மன்னித்து விடுங்கள், இதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா இல்லையா?
No comments:
Post a Comment