Tuesday, March 13

ஒரே ஒரு கிராமத்திலே

கண்ணு இரண்டும் தூங்கலையே
மனசு இன்னும் ஆறலையே
ஆசை மச்சான் நீயும் தான்
எப்போ எனைப் பார்க்கப் போறே?

ஊதக்காத்து உசுரை உருக்குது
வாடைக்குளிர் மேனி துளைக்குது
வட்ட நிலவு மனசை அள்ளுது
புறாமனசு உன்னைத் தேடுது

கூவுற குயிலும் உன் பேரைச் சொல்லுதய்யா
ஆடுற மயிலும் என் மனசைச் சொல்லலையா
ஒத்தைப் பனைமரம் போல
ஒத்தையில நிக்குறேனே
ஓடி வந்தா என்ன மச்சான்?

கண்ணாமூச்சி ஆட்டத்திலே
என்னைத்தவிக்க விடமாட்டே
கண்ணைமூடித் திறக்கையிலே
என்னெதிரே வந்து நிப்பே!

தப்பாட்டமுன்னு உனை விலக்கி வைச்சாலும்
என் மச்சான் உன் மனசு புரிஞ்சிருச்சே
இப்போ மனசு மூடிப் போச்சா?
இவ முகம் மறந்து போச்சா?

கரும்பு காட்டிலே ஒளிஞ்சதும்
கம்பங்காட்டிலே பேசினதும்
நான் இன்னும் மறக்கலையே
நீயும் தான் நினைக்கலையே!

ஊர்க்கிணத்துலே நீ முங்கி முங்கிக் குளிக்கையிலே
உள் நீச்சல் போட்டு உள்ளே உள்ளே போகையிலே
கைநடுங்க கால் நடுங்க படியோரம் நான் தவிக்க
காத்து போல மேல வந்து கண்ணாலே உசுரு கொடுப்பே!

மாரியம்மன் கோயிலிலே நீ பால்குடம் எடுக்கையிலே
மஞ்சத்தண்ணி ஊத்தணும்னு சுத்தி சுத்தி வந்தேனே
மஞ்சள் அரைச்சா ஊத்தினேன் என் மச்சான்
மனசை அரைச்சுல்ல ஊத்தினேன்!

நூறுமுகம் பார்த்தென்ன?
உன்முகம் காணாம
ஆறலையே என் மனசு

ஆறு மாசமென்ன ஆறு வருசமென்ன
நான் இருப்பேன் உன் நினைப்பில
என் உசுரு நிக்காது
நித்தம் உன்னை காணாம!

ஒரு நாளும் என்னைப் பார்க்காம
ஒம்பொழுதும் போகாது
இப்போ ஐந்தாறு மாசமாச்சே
எப்படித்தான் இருக்கியோ?

இளஞ்சூரியனும் வரப்போகுது
இளங்காளை நீ வருவியா?
நல்ல பொழுதும் வரப்போகுது
நல்லவனே நீ வருவியா?

வாய்க்கா வரப்பிலே
சாதிச் சண்டையிலே
உன்னைத்தான் வெட்ட வந்தான் - என்
உசுரைத்தான் வெட்ட வந்தான்

உன் முதுகு ரத்தம் பார்த்து
என் முகம் வேர்த்து போச்சு
என்னாச்சு தெரியலை ஏதாச்சு புரியலை
என் கையெல்லாம் சிவப்பு ரத்தம்
என் கீரைக்கொத்தும் கத்தி
வெட்டினவன் நெஞ்சு பக்கம்

கண்ணு முழிச்சு பார்க்கையிலே
கம்பி போட்ட கதவு என் முன்னாலே
காக்கி உடுப்பு என் எதிரிலே!

கூண்டுக்குள்ளே அகப்பட்ட
கிளியாகிப் போனேனே!
நீ வந்து எனைப் பார்த்தா என் மச்சான்
வானத்துலே பறப்பேனே!

ஏக்கத்திலே நானும்தான்
துரும்பாகிப் போனேனே!
நீ வந்து எனைப் பார்த்தா என் மச்சான்
சொக்கத்திலே மிதப்பேனே!

எப்போ வருவே என் மச்சான்?

அவன் வந்தா சொர்க்கமுன்னு
இவ எண்ணி ஏங்குறா
அவன் போயிட்டான் சொர்க்கமுன்னு
யார் வந்து சொல்றது?

வரப்பிலேயே உசுரு போச்சே
பாவி இவ அறியலையே
மச்சான் வருவான்னு மனசு விட்டு போனாளே
மாமன் வரலைன்னா உசுரு விட்டுப் போவாளோ?

கை தொட்டதில்லை கட்டியணைச்சதில்லை
கண் பார்த்தது தான் கருத்தில் சேர்த்ததுதான்

இப்படித்தான் எத்தனையோ கதை உண்டு கிராமத்திலே
இப்படித்தான் எத்தனையோ உசுரும் போச்சு நாட்டிலே
இப்படித்தான் எத்தனையோ மனசுந் தவிக்குது ஊரிலே
எப்பத்தான் உங்க மனசு மாறும் ஐயா?

சாதி ஒண்ணும் நம்ம உசுரு இல்லே
சாய்ஞ்சு போனா ஒண்ணும் தப்பில்லே!

6 comments:

காயத்ரி சித்தார்த் said...

//கை தொட்டதில்லை கட்டியணைச்சதில்லை
கண் பார்த்தது தான் கருத்தில் சேர்த்ததுதான்//

//சாதி ஒண்ணும் நம்ம உசுரு இல்லே
சாய்ஞ்சு போனா ஒண்ணும் தப்பில்லே!//

கலக்குறீங்க கோகிலா!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

காயத்ரி உங்களைப் போன்ற கவிஞர்களிடமிருந்து இருந்து பாராட்டு கிடைக்கும் போது நிஜமாகவே நிறைய எழுதணும் என்ற உத்வேகம் கிடைக்குது நன்றி!

Divya said...

கோகிலா, கவிதை வரிகள் நல்லாயிருக்கு,
இவ்வளவு பெரிய கவிதை இதுவரை நான் படித்ததில்லை........

சில வரிகள் சினிமா பாடல் வரிகள் போல் இருந்தது,
நீங்க சினிமா பாட்டுக்கு எழுத முயற்ச்சிக்கலாமே!!!

ரொம்ப ரசித்தேன் கோகிலா!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

ரொம்ப சந்தோஷம் திவ்யா!

எனக்குக் கவிதை எழுத வராது. ஒரு கதையை எடுத்துக் கொண்டு கவிதையாக மாற்ற வரும்(என்று நினைக்கிறேன்)


என்னுடைய இந்த கவிதையை வைரமுத்து அவர்களின் முன்னிலையில் வாசித்தேன் என்றால் நம்புவீர்களா?

கிராமத்துக் கவிதை என்பதால் அவரும் பாராட்டினார். அந்தத் தைரியத்தில் தான் துவக்கம் ஆரம்பித்தேன்.

Unknown said...

நாட்டுப்புற பாடல்கள் போல எழுதியுள்ளீர்கள். பாடல்கள் நல்ல கருத்துகளோடு வருகின்றன.

ஸ்ரீ said...

மச்சான்சஷ்டி கவசம் அருமை. கிராமத்து நடை மிகவும் ரசித்தேன். கருத்துள்ள கவிதை வாழ்த்துக்கள்

Post a Comment