Tuesday, May 27

தொலைபேசியிலிருந்து கைப்பேசி வரை...

பஸ்ஸில் ஏறி அப்பாடா! என்று உட்கார்ந்தவனுக்கு வயது முப்பத்தைந்து தான் ஆகிறது. ஆனால் பார்க்க நாற்பதைக் கடந்தவன் போல் இருப்பான். அவன் பெயர் கிருஷ்ணன். காலையிலிருந்து இப்ப வரை மதுரையவே ஒரு சுத்து சுத்தி வந்தாச்சு. அவன் முதலாளி ஆட்டோ, சாப்பாட்டுக்குன்னு கொடுத்த 200 ரூபாயில் 50 மட்டும் தான் செலவாச்சு. முதலாளியும் இதையெல்லாம் கணக்குக் கேட்க மாட்டார். அவரைப் பொறுத்தவரைக்கும் வேலையானா சரி. என்ன வேலைன்னு கேட்டாதீங்க, அது நமக்குத் தேவையில்லை.

எப்படியும் திருநெல்வேலி போய்ச்சேர 4 மணிநேரமாவது ஆகும். அதுவரை நிம்மதியாகத் தூங்கலாம். பஸ்ஸில் இன்னும் இடம் இருந்தது. இவனுக்குப் பக்கத்தில் யாரும் வரலை. பின்னாடி சீட்டில இரண்டு பேர் காலேஜ் பசங்க போல இருந்தார்கள். பக்கத்துல பக்கத்துல இருந்தாலும் இரண்டு பேரும் செல்போனில் பேசியபடி வேறுவேறு உலகத்தில் இருந்தார்கள்.

டிரைவருக்குப் பின் சீட்டில் மூன்று பெண்மணிகள் என்னவோ பேசிக் கொண்டு வந்தனர். நடுவில் இருந்த பெண் பார்ப்பதற்கு அவன் அம்மா போல இருந்தாள். அந்தப்பெண் அணிந்திருந்த மொத்தையான செயின் அம்மாவிடம் கிடையாது. நவரத்தினம் பதித்த அந்த பெரிய கம்மல், மயில் வடிவ மூக்குத்தி, கையிலிருந்த ஆறு தங்க வளையல் ஏதும் கிடையாது அம்மாவிடம். எல்லாம் போய்விட்டது.

இவன் பிறக்கும் போது அவன் வீடு நிஜமாகவே கோகுலம் போல் இருக்குமாம். அவ்வளவு செல்வச்செழிப்பு. குறைந்தது 4 வேலைக்காரர்களாவது இருந்தார்களாம். கிருஷ்ணன் ஐந்து வயதில் அவனது தாத்தாவுடன் நடந்து செல்லும் போது தெருவே வணக்கம் வைக்கும். அவனது அப்பா இருக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

இப்போது இவனுக்கு எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பெரியவரின் செல் அடித்தது. யாரும் பார்க்காத மாதிரி காதை மூடிக் கொண்டான். என்னவோ அவனுக்கு செல்போன் சத்தமே பிடிப்பதில்லை.

அவன் வீட்டில் தொலைபேசி இருந்தது. நல்ல கறுப்பு கலர். இருபது வருடங்கள் முன்பு இவனது தெருவில் தொலைபேசி இருந்த நான்கைந்து வீடுகளில் இவனது வீடும் ஒன்று. தொலைபேசி வந்த புதிதில் யாரையும் தொட விட மாட்டான்.


தொலைபேசியைத் துடைப்பதற்குக் கூட வேலைக்காரர்களுக்கு அனுமதி இல்லை. அதற்காகவே ஒரு அழகான கைக்குட்டை வாங்கினான்.

பக்கத்து வீடு, எதிர் வீடு, நாலு வீடு தள்ளியிருந்த நாடார் கடை, எதிர் வரிசையிலிருந்த டீக்கடை என கிட்டத்தட்ட தெருவில் பாதி பேர் இவர்கள் வீட்டு நம்பரைத்தான் அவங்க அவங்க சொந்தக்காரங்க, நண்பர்களுக்கெல்லாம் தந்திருந்தாங்க. கிருஷ்ணனோட அப்பா அம்மா குணம் தங்கம். இவனுக்கு தான் பணக்காரன் அப்படிங்கற திமிர் கொஞ்சம் உண்டு.

ஒரு தடவை டீக்கடை ரத்தினத்துக்கு அவன் பொண்டாட்டி கிட்ட இருந்து போன் வந்தது. இவன் ரத்தினம் கையில தரவே இல்லை.

“என்ன விஷயம் சொல்லுங்க, நான் டீக்கடை அண்ணன்கிட்ட சொல்லிடுறேன்” என்றான்.

அவன் பொண்டாட்டி லேசுப்பட்டவளா? அவளும் விடாம “என் வீட்டுக்காரர்கிட்டத் தான் சொல்லுவேன்”னு நின்னா. அவளுக்கு இந்த சின்னப் பையன்கிட்ட என்னத்த சொல்லுறதுன்னு கடுப்பு.

ஆனா கடைசி வரை கிருஷ்ணன் ரத்தினத்துக்கு போனைத் தரவே இல்லை.

போன் வந்தாலே இப்படி. யாராவது போன் பண்ணனும் என்று வந்து விட்டால் அவ்வளவு தான். இந்த பந்தா ன்னு சொல்வாங்களே அதை இவன் பண்றதைப் பார்த்து நீங்க புரிஞ்சிக்கலாம். சின்னப்பையனிடம் இப்படி வாய்மூடி நிற்க வேண்டியிருக்கிறதே என்று இவன் பள்ளிக்கூடம் போற சமயமாக வருபவர்களும் உண்டு,

இவன் கோட்டடித்து கோட்டடித்து 8ம் வகுப்பு வருவதற்குள் பதினாறு வயதைத் தொட்டிருந்தான். அப்போது திடீரென அவன் அப்பா தவறிவிட , பொறுப்புகளை ஏற்க வேண்டிய பக்குவமும், திறமையும் இல்லாததால் தடுமாறிப் போனான். ஆனால் அதிகாரமும், திமிரும் கொஞ்சமும் குறையவில்லை,

இவனது அம்மா எப்படியாவது இவனைப் பள்ளியாவது முடிக்க வைத்து விட வேண்டும் என்று நகைகளையும், பொருட்களையும் விற்று சமாளித்தாள். இவன் பள்ளி முடித்து (அப்படியும் +2 தேறவில்லை) சுதாரிப்பதற்குள், வருமானமும் ஏதும் இல்லாததால் பத்தே வருடங்களில் ஏழையாகுப் போனார்கள். அவன் அம்மா வீட்டு வேலை செய்யப் போய் விட்டாள்.

எந்த வேலையையும் கௌரவம் பார்க்காமால் செய்யும் மனப்பக்குவம் வரும் போது வயது முப்பதைக் கடந்திருந்தது. கடைசியில் இந்த முதலாளியிடம் சேர்ந்தான். இந்த ஐந்து வருடங்களில் எல்லோர் கைகளிலும் செல்போன் முளைத்திருந்தது. முதலாளி வீட்டில் மட்டும் மூன்று செல்போன்கள்.

1000 ரூபாய்க்கு ஒரு செகண்ட் ஹேண்டாவது வாங்கிடணும்ன்னு எத்தனையோ பிரயத்தங்கள் எடுத்து முட்டி மோதி பார்த்து விட்டான். ஊஹூம்...

ஒரு தடவை முதலாளி வீட்டில வைத்து யாருக்கோ போன் செய்ய வேண்டியிருந்தது. முதலாளி அவர் செல்லைத் தராமல் அவரோட சின்ன மகனோட செல்போனை எடுத்துக் கொடுத்துட்டாரு. அப்போது கைத்தவறுதலா கிருஷ்ணன் செல்போனைக் கீழே போட்டுட்டான். அவ்வளவுதான் ஏற்கனவே கோவத்துல இருந்த அந்த பையன் படாரென்று கிருஷ்ணனை அடிச்சுட்டான்.

அதிலிருந்து இவனுக்கு செல்போன் வைத்திருப்பவர்களையும் பிடிப்பதில்லை. செல்போன் சத்தமும் பிடிப்பதில்லை.

டிரைவர் பஸ்ஸை எடுக்கும் போது அவருடைய செல் அடிக்க ஆரம்பித்தது. இவன் தூங்குவது போல் அழ ஆரம்பித்தான்.

1 comment:

Post a Comment